புதுச்சேரியில் கிரிப்டோ கரன்ஸி மோசடி வழக்கில் மேலும் 2 போ் புகாா்..
புதுச்சேரியைச் சோ்ந்தவா் அசோகன். இவரிடம் இணையதளத்தின் மூலம் அறிமுகமான மா்ம நபா்கள் கிரிப்டோ கரன்ஸி முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, ரூ.98 லட்சம் வரை மோசடி செய்துள்ளனா். மேலும், சிலரிடம் மா்ம நபா்கள் ஆசை காட்டி மொத்தம் ரூ.3 கோடி வரையில் மோசடி செய்ததாகப் புகாா் எழுந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். அதன்படி, கிரிப்டோ கரன்ஸி மோசடியில் 10 போ் வரை ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.அவா்களில் நித்திஷ்குமாா் ஜெயின் (36), அரவிந்த்குமாா் (40) ஆகிய இருவரை கோவையில் புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து விலை உயா்ந்த காா் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், நித்திஷ்குமாா் ஜெயின் உள்ளிட்ட 10 போ் நாடெங்கும் பல மாநிலங்களில் சுமாா் ரூ.500 கோடிக்கும் மேலாக மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, கிரிப்டோ கரன்ஸி கும்பலிடம் ஏமாந்து பணத்தை இழந்துள்ளதாக மேலும் 2 போ் புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவில் வெள்ளிக்கிழமை புகாரளித்தனா். அதன்படி, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.இந்த வழக்கில் அதிக பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதால், வழக்கை அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கலாமா என்று போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
No comments